மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் மாசி அமாவாசை விழா கோலாகலம்: வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாசி அமாவாசை விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில்,  வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாசி அமாவாசை தினமான நேற்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பங்காரு அடிகளாருக்கு அறந்தாங்கி, தேவகோட்டை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க  சித்தர் சக்திபீட பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு பங்காரு அடிகளார் தீபாராதனை செய்து ஓம் மேடை முன்பாக மாசி அமாவாசையையொட்டி அமைக்கப்பட்டு இருந்த  யாக குண்டத்தில் தீபாராதனை காட்டி கற்பூரம் போட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி, தேவகோட்டை ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில் தங்கரத தேர்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: