செங்கல்பட்டில் பஸ் நிலையம் - சட்ட கல்லூரி வரை அரசு பேருந்து இயக்கம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, அரசு சட்டக்கல்லூரி வரை, அரசு பேருந்து சேவையை கலெக்டர் ராகுல்நாத் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு நகர பகுதியில், அரசு மருத்துவமனை மற்றும்  மருத்துவ கல்லூரி, அரசு கலை மற்றும் சட்டகல்லூரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் என 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  அரசு பேருந்துகளில் அதிக அளவில் மாணவர்களும்  பயணிப்பதால் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு சட்டக்கல்லூரி வரை பேருந்து இயக்க வேண்டுமென, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று அவர், நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து - அரசு சட்டக்கல்லூரி வரை அரசு பேருந்தினை   கொடியசைத்து துவக்கி வைத்தார். புதிய வழிதடத்தில் இயக்கப்பட்ட அரசு  பேருந்தில் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற  தலைவர் ஆகியோர் பயணித்தனர். இந்நிகழ்ச்சியில்,  நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: