சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமான சேவை

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமான சேவை இயக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து 3 ஆண்டு கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

3 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஆண்டு கோடைகாலம், சுற்றுலா செல்வதற்காக மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்களில், பயணிகள் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகின்றன. இதை அடுத்து விமான நிறுவனங்கள், வருகின்ற மார்ச்சில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரித்துள்ளன. அதன்படி லுப்தான்சா விமான நிறுவனம், ஜெர்மனின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னைக்கு, தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும், விமான சேவைகளை இயக்கி வருகிறது. அது மார்ச் மாதத்தில் இருந்து வாரத்தில் 5 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன. அதேபோல் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனமும், வாரத்தில் விமான சேவையை 5  நாட்களாக அதிகரித்துள்ளன.

அபுதாபி-சென்னை- அபுதாபி இடையே எத்தியட் ஏர்லைன்ஸ் நிறுவனம், வாரத்தில் 7  விமான சேவைகளை இயக்கி வருகின்றன. அது 14 ஆக அதிகரிக்க இருக்கின்றன. ஏர் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம், செயின்ட்  டெனிஸ்-சென்னை-செயின் டென்னிஸ் இடையே வாரத்தில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வருகிறது. அது 2 நாளாக இயக்க இருக்கின்றது. சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டும், ஒரு சேவை இயக்கி வந்தது. அது தற்போது இரவில் 2  சேவைகளும், பகலில் ஒரு சேவையுமாக, நாள் ஒன்றுக்கு 3  சேவைகளை இயக்கத் தொடங்கி விட்டன.

மேலும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோலாலம்பூர்-சென்னை-கோலாலம்பூர் இடையே தினமும் இரவில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வந்தநிலையில் தற்போது பகலில் ஒரு சேவை என்று ஒரு நாளைக்கு 2  சேவைகளாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வருகின்ற மார்ச் 26ம் தேதியிலிருந்து, சென்னை-அபுதாபி-சென்னை இடையே புதிய சர்வதேச விமானத்தை, தினசரி விமானமாக இயக்க இருக்கிறது. அதைப்போல் சென்னை-மஸ்கட்-சென்னை இடையே மற்றொரு சர்வதேச விமானத்தை தினசரி விமானமாக இயக்கப் போவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது.

ஒரே நாளில் 2 புதிய சர்வதேச விமான சேவைகளை, அந்த நிறுவனம்  தொடங்குகிறது. தற்போது லண்டன்-சென்னை- லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனமும் ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் மேலும் பல விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து பல  நாடுகளுக்கு கூடுதல் விமான சேவைகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: