தலைமை செயலகத்தில் ரெய்டு, கொடநாடு கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடியின் மீசை என்ன செய்தது? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். கணபதிநகர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருமகன் ஈவெராவுக்கு வாக்கு கேட்டு வந்தேன். ஏறக்குறைய 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தார். ஆனால், இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. மகன் செய்த பணியை தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்வதற்கு வாய்ப்பு கேட்டு கலைஞரின் பேரனாக, தந்தை பெரியாரின் பேரனுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

 எதிரணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டிவிடுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி இங்கு ஓட்டு கேட்டு வந்தார். மக்களிடம் வரவேற்பு இல்லாத விரக்தியில் மீசை வைத்த ஆம்பளயா, வேட்டி கட்டிய ஆண் பிள்ளையா என கேட்டார். 2016ம் ஆண்டு தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே, அவரது காதுகளை மூடிக்கொள்கிறது அவரது மீசை. தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக அவரது மீசை இருந்தது. இரு பெண்களின் கால் செருப்பிற்கு பாலீஸ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர்.

நான்கு நாள் சேவ் செய்யவில்லை என்றால் எல்லாருக்கும் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள். தற்போதை முதல்வர் போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டா நீங்கள் முதல்வர் ஆனீர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு பேசுகிறீர்கள். மோடிக்கு அடிமையாக இருந்து கொண்டு அண்ணாவின் பெயரில் கட்சியும், கொடியில் அண்ணா படத்தையும் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆட்டுக்கும் தாடியும், நாட்டிற்கு ஆளுநரும் தேவையில்லை என்று கூறிய அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு ஆளுநருக்கு அடிமையாக இருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் 19 மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருக்கும் ஆளுநரை பார்த்து என்றைக்காவது கேள்வி கேட்டது உண்டா.

ஆட்சியில் இருந்த போது இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருந்துவிட்டு தற்போது ஆட்சி முடிந்ததும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு கமலாலயத்திற்கு பஞ்சாயத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா என யாருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை. மக்களுக்கும் உண்மையாக இருந்ததில்லை. மாறாக, டெல்லி எஜமானர்கள் மோடி, அமித்ஷா ஆகிய இருவருக்கு மட்டுமே உண்மையாக இருந்து கொண்டிருக்கிறார். மகளிருக்கான உரிமைத்தொகை 1000 ரூபாய் 5  மாததத்தில் வந்து சேரும். ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதும் ரூ.1000  கோடிக்கு புதிய திட்டங்கள் வர உள்ளது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

* மீண்டும் செங்கல்...

அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகின்றது. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டது. சென்னையில் ரூ.64 கோடி செலவில் கிங்ஸ் பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைய உள்ளது. மதுரையில் கலைஞர் நூலகம் 6 மாதங்களுக்கு முன்னதாக பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 3ல் திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ல் அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே மதுரையில் ரூ.3  ஆயிரம் கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆய்வு செய்வதற்காக ரூ.300 கோடி தற்போது வரை செலவு செய்யப்பட்டுள்ளது (எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை எடுத்து காண்பித்தார். இதற்கு மக்கள் கைதட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்). அதிமுகவும், பாஜவும் இதுவரை கட்டிடம்  கட்ட எதுவும் செய்யவில்லை. 

Related Stories: