இறகு பந்து போட்டியில் தாசில்தார் சுருண்டு பலி: கபடி வீரர் மாரடைப்பில் மரணம்

சென்னை: தர்மபுரி காந்திநகரை சேர்ந்தவர் அதியமான் (54). இலங்கை அகதிகள் முகாம் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். நேற்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு உள் அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கு இடையே நடந்த இறகுப்பந்து போட்டியில் தாசில்தார் அதியமானும் ஆர்வமுடன் விளையாடினார். அப்போது அதியமான், திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கபடி வீரர் சாவு: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் நேற்றுமுன்தினம் இரவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பாளையம், காசக்கரன்பட்டியை சேர்ந்த வீரரும் பயிற்சியாளருமான மாணிக்கமும் (26) பங்கேற்றார். 2 போட்டிகளில் வெற்றி பெற்று 3வது போட்டியில் விளையாட காத்திருந்த மாணிக்கத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

Related Stories: