காங். வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: ஈரோட்டில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ல் நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சாபில் மேனகா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைமையிலான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக இதுவரை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவ், எம்.பி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எம்.பி விஜய் வசந்த், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரசாரம் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பிரசாரம் செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 3 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். பிரதான கட்சிகளின் பிரபலங்கள் நேற்று ஒரே நாளில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் ஈரோட்டில் பிரசாரம் அனல் பறந்தது. இந்நிலையில், திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.

அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து, நாராயணவலசு, முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் படிப்பகம், பம்பிங் ஸ்டேஷன் ரோடு, பழனிமலை வீதி, கமலா நகர், வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம், அக்ரஹாரம் பள்ளிக்கூடம், காந்தி நகர் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேனில் நின்றவாறு பொது மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். 2ம் கட்டமாக 24ம் தேதி உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் இறுதி நாளான 25ம் தேதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதே போல் எடப்பாடி பழனிசாமி 2ம் கட்டமாக 24 மற்றும் 25ம் தேதியும், பாஜக தலைவர் அண்ணாமலை 2வது கட்டமாக 24, 25ல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் பிரசாரம் களைகட்டி உள்ளதோடு அனலும் பறக்கிறது.

Related Stories: