சென்னை: பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. ஆலோசனை கூட்டத்துக்கு பின் இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவரது அணியை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வார்களா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.