கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 7 நாள் கெடு: வியாபாரிகளுக்கு நோட்டீஸ்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழம், பூ, உணவு தானிய கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை   7 நாட்களில் அகற்ற வேண்டும் என  வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து அங்காடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. இங்கு காய்கறி, பழம் மற்றும் பூ வாங்குவதற்காக தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், காய்கறி, பழம் உள்ளிட்டவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகளில் இங்கு கொண்டு வரப்படுகிறது. இதனால், மார்க்கெட் வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இங்குள்ள கடைகளின் முன்பு உள்ள பகுதியை ஆக்கிரமித்து, பலர் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருவதால் இட நெருக்கடி ஏற்படுவதாக அங்காடி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, அங்காடி நிர்வாகம் சார்பில், கடந்த 2 நாட்களாக வியாபாரிகளுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதில், கடையின் முன்பு ஆக்கிரமிப்பு கடைகளை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்யும்படியும் அறிவித்துள்ளனர். மேலும், கடையின் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை 7 தினங்களுக்குள் அகற்ற வேண்டும்,  இதனை மீறி கடைகளை அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளின் முன்பு உள்ள இடத்தை ஆக்கிரமித்து பலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின்பேரில் ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாகவே அற்றாவிட்டால், அங்காடி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும்,’’ என்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கடையின் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற  அங்காடி நிர்வாகம் 7 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்று, அதனை கடைபிடித்து அங்காடி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து அங்காடி நிர்வாகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளை அங்காடி நிர்வாகம் அகற்றினாலும், மறுபடியும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்றினால் அந்த வழியில் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இதுகுறித்து  போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு பயனும் இல்லை,’’ என்றனர்.

Related Stories: