சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுகவினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் கல்லுக்குளத்தை சேர்ந்தவர் உபயதுல்லா (83). திமுக மூத்த தலைவர். இவர், 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார். மேலும், திமுகவில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். தற்போது திமுக மாநில வர்த்தக அணி தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் கல்லுக்குளத்தில் உள்ள வீட்டில் இருந்த உபயதுல்லாவுக்கு நேற்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உபயதுல்லா உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். உபயதுல்லாவின் மனைவி மற்றும் மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். ஒரு மகள் மட்டும் உள்ளார்.
உபயதுல்லா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திமுக முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து, அண்ணாவின் மீதும் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த உபயதுல்லா, என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர். நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா, 2006ம் ஆண்டு கலைஞர் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் கலைஞர் விருதினையும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதினையும் எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். உபயதுல்லாவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணியளவில் கல்லுகுளம் இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. தஞ்சாவூர் ஆத்துப்பாலம் ஜூம்மா மசூதியில் தொழுகைக்கு பின் அவரது உடல் அங்குள்ள முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.