சிவராத்திரி, அமாவாசை காரணமாக காசிமேட்டில் குறைந்த மக்கள் கூட்டம்: மீன்களின் விலையும் குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை காசிமேட்டில் ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும்,  சிவராத்திரி, அமாவாசை காரணமாக, வழக்கத்தை விட கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. அதேநேரத்தில். மீன் விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற நாட்களை விட கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுமுறை தினம். இந்நாளில் அனைவரும் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது வழக்கம். இங்கு கொண்டுவரப்படும் மீன்களுக்கு ருசியே தனியாக இருக்கும் என்று மக்கள் பேசிக் கொள்வது உண்டு.

இதற்காக, அதிகாலை முதலே சென்னை காசிமேட்டிற்கு மீன் வாங்க மக்கள் படையெடுத்து செல்வது வழக்கம். இதனால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு பகுதி மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடும். எங்கு பார்த்தாலும் பொதுமக்களும், சில்லறை வியாரிகள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்களாக காட்சியளிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரி. இந்த சிவராத்திரி நேற்று அதிகாலை வரை நீடித்தது. அது மட்டுமல்லாமல் இன்று அமாவாசை வேறு. இந்த நாட்களில் வீடுகளில் அசைவ உணவுகளை சமைப்பதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேநேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு.

இருந்தபோதிலும், நேற்று அதிகாலை முதல் குறைந்த அளவிலேயே மக்கள் காசிமேடு பகுதிக்கு வர தொடங்கினர். இதனால், வழக்கத்தை விட கூட்டம் பல மடங்கு குறைவாக காணப்பட்டது. விற்பனையும் மந்தமாக இருந்தது. மக்கள் வரத்து குறைவால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, கடந்த வாரம் முழு வஞ்சிரம் ரூ.850க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ.650 ஆக குறைந்து காணப்பட்டது. சங்கரா ரூ.600 லிருந்து ரூ.350 ஆகவும் விலை குறைந்திருந்தது. இதே போல வெள்ளை வவ்வால் ரூ.550க்கும், கறுப்பு வவ்வால் ரூ.600க்கும் விற்கப்பட்டது.

இதே போல இறால், கடவான், திருக்கை, சீலா, நண்டு கடம்பா உள்ளிட்ட மீன்கள் விலையும் குறைந்து காணப்பட்டது. விலை குறைவாக இருந்தால் மீன் வாங்க வந்திருந்த அசைவ பிரியர்கள் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. இதேபோல சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியிலும் மீன்கள் வாங்க மக்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். அதே போல மட்டன், சிக்கன் விற்பனையும் நேற்று மந்தமாக இருந்ததை காண முடிந்தது.

Related Stories: