விழுப்புரம் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை: சிபிசிஐடி ஏடிஎஸ்பியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

விழுப்புரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குணடலபுலியூரில் நடத்திய அன்பு ஜோதி ஆசிரம், புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் உள்ள கிளை ஆகியவற்றில் பலர் மாயமானதும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது. புகாரின்படி கெடார் போலீசார் ஆசிரம உரிமையாளர் ஜூபின்பேபி அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். நேற்று முன்தினம் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் மற்றும் விவரங்களை செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி இன்று ஒப்படைக்கிறார். அதன்பின் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வருவாய்த்துறை அதிகாரிகளும், கெடார் போலீசாரும் அன்புஜோதி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே 3 மாடி கட்டிடமாக உள்ள அந்த ஆசிரமத்தில் மேலும் 2 மாடி  கட்டப்படுகிறது.  கூலியாட்களை வைத்து வேலை செய்தால் ஆசிரமத்தில் நடக்கும் மர்மம் வெளியே தெரிந்துவிடும் என்று கருதி அங்கு தங்கியிருந்தவர்களையே வேலை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரம பெண்களை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து விசாரணை நடத்தினர். பின்னர், மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறுகையில், ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட 2 பெண்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கூடுதலாக அரசு மனநல காப்பகங்களை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், தற்போதைய ஆய்வு அறிக்கை சிபிசிஐடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.  இங்கு தங்கியிருப்பவர்களில் பலர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். அங்குள்ள மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் பேசி அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்றார்.

Related Stories: