தடுப்பூசி போட்ட பின் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி நிவாரணம்: சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவிப்பு

சிங்கப்பூர்: கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 1.4 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்க தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த  வகையில் சிங்கப்பூரில் நான்கு வகையான தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  அந்நாட்டு சுகாதாரத்துறை அப்போது வெளியிட்ட அறிவிப்பில், ‘தேசிய தடுப்பூசி  திட்டத்தின் கீழ், அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள்,  நிரந்தர குடியிருப்பாளர்கள், நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் மற்றும்  குறுகிய கால விசாக்கள் உள்ளிட்டோருக்கு இலவச தடுப்பூசிகள் போடப்படும்.  அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்பவரில் எவராது உயிரிழந்தால், அவர்களுக்கான  இழப்பீடு தரப்படும்’ என்று அறிவித்தது. இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், ‘மாடர்னாஸ்பைக்வாக்ஸ்’ என்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்த தடுப்பூசி போட்ட 21 நாட்களுக்கு பின்னர், அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி திடீரென இறந்தார். இவரது மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதையடுத்து அந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை மற்றும் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தடுப்பூசி போட்ட இளைஞர் ஒருவர், அடுத்த 21 நாட்களில் இறந்தார். அவரது இறப்புக்கான காரணம், ‘மயோர்கார்டிடிஸ்’ என்று சான்றளிக்கப்பட்டது. இது கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு எஸ் 225,000 டாலர் (₹1.4 கோடி) நிவாரணம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: