கர்நாடக பட்ஜெட் உரையில் மேகதாது அணை முதல்வர் பசவராஜ்க்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடக சட்டமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்து இருக்கிறார். அதில் மேகதாது அணை  திட்டம், பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாகும். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது  என்று அவர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

காவிரியில் நீரை தடுத்து, மேகேதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழ்நாட்டின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெக்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மேகேதாது அணையை கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பாஜ அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருப்பதும் கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறுவதையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: