இடைத்தரகர்கள் இம்சை இனி இல்லை விளைபொருட்களின் விற்பனைக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு: தேனி இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் சாதனை

தேனி: தேனி நாடார் சரசுவதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் இடைத்தரகர் இல்லாமல் விளைபொருள்களை ரகசியமாக விற்பனை செய்வதற்காக விவசாயிகளுக்கான மென்பொருளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். விவசாயிகளுக்கும், விளைபொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது. விளைவிக்கும் விவசாயிகளுக்கு முழு லாபம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கடந்த 1996-2001ல் ஆட்சியில் இருந்தபோது உழவர் சந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இத்தகைய திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நிலங்களில் விளையும் அனைத்து விளைபொருட்களையும் விற்பனை செய்து விட முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், கமிஷன் கடைகளுக்கு விளைபொருட்களை நேரடியாக கொண்டு சென்று ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஏலம் எடுப்பவர்கள், கொடுக்கும் விலையை காட்டிலும், நான்கு மடங்கு விலை அதிகம் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலமாக இடைத்தரகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களும் பாதிக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலையை போக்கும் வகையில் விவசாயி, தன்னுடைய விளைபொருளை இணையத்தில் பதிவிட்டு, அதனை வாடிக்கையாளர்களே நேரடியாக இணையத்தின் மூலம் விலைபேசும் வகையிலான மென்பொருளை தேனி நாடார் சரசுவதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்லூரியின் கணிப்பொறியியல் துறை இறுதியாண்டு மாணவி ஜனனிபிரியா, மூன்றாமாண்டு மாணவியர் பிரியங்கா, ஜெனிபர் பாத்திமா, தர்ஷினி ஆகியோர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மாணவியர் கூறும்போது, ‘‘பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இத்தகைய புதிய மென்பொருளிலான ‘ஆப்’ கண்டுபிடித்துள்ளோம்.

இந்த பிளாக் செயினில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ‘ஆப்’பில் விவசாயி தன்னுடைய பொருளை வியாபாரப்படுத்தும்போது, அதன் தரம், பயன்பாடு, விலை நிலவரம், இருப்பின் அளவு போன்றவற்றை குறிப்பிடுவார். இதனை ‘ஆப்’பில் ரிஜிஸ்டர் செய்துள்ள வாடிக்கையாளர்கள் ரகசியமாக விலைகேட்க முடியும். கேட்கப்படும் விலையானது மற்ற வாடிக்கையாளர்களுக்கு எந்த நிலையிலும் வெளியே தெரியாதபடி, இந்த ‘ஆப்’ ரகசியம் காக்கும் விதத்திலான மென்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு கேட்கும் வாடிக்கையாளரை இந்த மென்பொருள் மூலமாக அறியும் விவசாயி, தன்னுடைய நிலத்தில் விளையும் பொருளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகள் நல்ல லாபம் அடைய முடியும்’’ என்கின்றனர்.

தேசிய அளவில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மென்பொருள் உருவாக்கும் போட்டி சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இதில் தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களது உருவாக்கங்களை சமர்ப்பித்தனர். இதில் தேனி நாடார் சரசுவதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் சமர்ப்பித்த விவசாயிகளுக்கான இடைத்தரகர்களின்றி விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் இந்த மென்பொருள் கண்டுபிடிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு மட்டுமின்றி அனைத்து உற்பத்தி பொருள்களுக்குமே இந்த பிளாக்செயின் முறையிலான புதிய மென்பொருள் இணைய முறையில் புதிய சாதனையை இக்கல்லூரி மாணவியர் செய்துள்ளனர்.

Related Stories: