ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 24, 25ம் தேதி ஆதரவு திரட்டுகிறார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல்  கட்சியினர் மற்றும் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம்  தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கி பிப்.7ம் தேதி வரை நடைபெற்றது. 10ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல்  அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுதிக  வேட்பாளராக ஆனந்த், நாதக வேட்பாளராக மேனகா மற்றும் இதர கட்சியினர்,  சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியில் உள்ளனர்.

இதையடுத்து 77  வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, பேலட் சீட் தயாரித்து  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஓட்டும் பணி நடந்து வருகிறது.  அதேபோல், 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான  முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொண்டு  வருகின்றனர்.  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை  ஆதரித்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொதுசெயலாளர்  தினேஷ் குண்டு ராவ், ப.சிதம்பரம் எம்.பி, மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை  சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரசாரம் செய்துள்ளனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாள்  பிரசாரம் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக  வேட்பாளரை ஆதரித்து துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன்  விஜயபிரபாகரன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர்  கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  3 நாள் பிரசாரம் செய்துள்ளார். காங்கிரஸ்  வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின்  வருகிற 24ம் தேதியும், 25ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 20 மற்றும் 21ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள  உள்ளார். இன்று (19ம் தேதி) மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,  மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு  ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கின்றனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து  எடப்பாடி பழனிசாமி 2ம் கட்டமாக வருகிற 24, 25ம்  தேதியும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை இன்றும், நாளையும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து  அக்கட்சி பொருளாளர் பிரேமலதா இன்று முதல் பிரசாரம்  மேற்கொள்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் 2ம்  கட்டமாக 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு 27ம் தேதி என்றாலும் பிரசாரத்துக்கு ஒரு  வாரமே இருப்பதால், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை  வேட்பாளர்களும் காலை, மாலை மட்டும் அல்லாமல் மதியம்  சுட்டெரிக்கும் வெயிலிலும் வீதி, வீதியாக சென்று அனல் பறக்கும்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* இன்று முதல் ‘பூத் சிலிப்’ விநியோகம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறுகையில், வாக்காளர்களுக்கு இன்று (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை ‘பூத் சிலிப்’ வழங்கப்படவுள்ளது. இதற்காக, வாக்குச்சாவடிக்கு ஒருவர் எனும் கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகளுக்கு 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நேற்று ‘பூத் சிலிப்’ படிவங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, விவரங்களை சரிபார்த்து ‘பூத் சிலிப்’ வழங்குவர். பூத் சிலிப் கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு, வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்குச்சாவடிகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

* 344 தபால் வாக்குகள் பெறப்பட்டன

வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தங்களது ஓட்டுகளை தபால் மூலமாக செலுத்துவதற்காக, “12டி” படிவம் வழங்கப்பட்டது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 31 பேரும் என மொத்தம் 352 வாக்காளர்களில், 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. விடுபட்ட வாக்காளர்களிடம் நாளை (20ம் தேதி) தபால் வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படும்.

Related Stories: