சோழவரம் ஏரியில் வெளியேறும் உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

புழல்: சோழவரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சோழவரம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், மதகு கால்வாய் நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர் நகர், ராஜாங்கம் நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி வழியாக சுமார் 4 கிமீ தூரம் பயணித்து புழல் ஏரியை சென்றடைகிறது.

சமீப காலமாக இந்த கால்வாயின் இருபக்கங்களையும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி வீடுகள், கடைகளில் இருந்து கால்வாயில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் திறந்தும் விடப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் தண்ணீர் வெளியேற வழியின்றி வீணாகி வருகின்றன. ஆகாய தாமரையும் வளர்ந்துள்ளது. இதனால் சென்னைக்கு வரும் குடிநீர் மாசுபடிந்து, குடிக்க லாயகற்ற நிலையில் உள்ளது. தவிர, கால்வாயில் கழிவுநீர் தேக்கத்தினால் கொசுக்கள் அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் மற்றும் நோய் தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து, கால்வாய் அடைப்புகளை நீக்கி, முறையாக பராமரித்து, சென்னை நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும், உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கழிவுகள் கொட்டுபவர்களை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: