திருப்புவனம்: கீழடி அருங்காட்சியகத்தில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் மெகா சைஸ் எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்டு, அகழாய்வு பணிகள் குறித்த தகவல்கள், செய்திகளை ஒளிபரப்ப தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த 2 ஏக்கர் பரப்பளவில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.11.3 கோடியில் 10 கட்டிடங்களுடன் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
10 கட்டிடங்களில் வரவேற்பறை, நிர்வாக அறை, மினி தியேட்டர் தவிர்த்து, 6 கட்டிட தொகுதிகளில் இரும்பு, தங்கம், எலும்பு, சுடுமண் சிற்பங்கள், அணிகலன்கள், வரி வடிவ எழுத்துகள் என தனித்தனியாக காட்சிப்படுத்த கீழ்தளம், மேல்தளத்துடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளங்களிலும் காட்சிப்படுத்தப்பட உள்ள பொருட்கள் சார்ந்த அகழாய்வுப் பணிகள் நடந்தபோது எடுத்த படங்கள், வீடியோ காட்சிகள், அந்த பொருட்களின் பயன்பாடு, அவற்றின் காலம் உள்ளிட்ட விபரங்கள் இந்த கட்டிடங்களில் பொருததப்பட்டுள்ள மெகா சைஸ் டிவிக்களில் ஒளிபரப்பப்பட உள்ளன.
இதுவரை அருங்காட்சியகங்களில் பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக கீழடி அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணிகள், பொருட்கள் குறித்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. சிறிய கட்டிட தொகுதியில் ஒரு டிவியும் பெரிய கட்டிட தொகுதியில் 2 டிவிக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 8 டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒவ்வொரு கட்டிட தொகுதியிலும் புடைப்பு சிற்பங்கள், மினியேச்சர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேரடி காட்சியாக டிவியிலும் ஒளிபரப்புவது பார்வையாளர்கள், சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.