பல்கலை நுழைவுத்தேர்வுக்கு 10ம் வகுப்பு மார்க் தேவையில்லை: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2021ம் கல்வி ஆண்டில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், தங்களின் மதிப்பெண்களை நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என்று தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 9ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்ட பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (CUET-UG 2023)க்கான அறிவிப்பில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 10ம் வகுப்பில்  தாங்கள் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை என்றும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்ததுடன், மதிப்பெண் பட்டியல்களில் மதிப்பெண்கள் ஏதும் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதியும் அவர்களின் வசதிக்காகவும், இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது 2021ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான பகுதி விண்ணப்பங்களில் இடம் பெறாது. அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மதிப்பெண்களை குறிப்பிட தேவையிருக்காது.

ஏற்கனவே விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும் கட்டணம் செலுத்தியுள்ளவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடத் தேவையில்லை. மேலும், ஆன்லைன் விண்ணப்பங்கள் பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை பெறப்படும். மே மாதம் 21ம் தேதிமுதல் தேர்வுகள் நடக்கும். நுழைவுத்  தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பிரச்னைகள் இருக்குமேயானால், அத்தகைய மாணவ, மாணவியர் 011-40759000/011-69227700 அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும், இது ெதாடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in, //cuet.samarth.ac.in என்ற தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: