இயற்கை மருத்துவத்தை மீட்டெடுக்க புழலில் மூலிகை தோட்டம்: சிறை கைதிகள் அசத்தல்

புழல்: புழல் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள், தண்டனை முடிந்து வெளியில் வரும்போது சமூகத்தில் சுய கவுரவத்துடன் வாழ சிறைத்துறை சார்பில் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது கைதிகள் மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடி தோட்டத்தை உருவாக்கி உள்ளனர். பல்வேறு நோய்களுக்கு இயற்கை முறையில் மருத்துவம் அளிப்பதற்கான அரிய வகை மூலிகைகள் இந்த தோட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இங்கு பயிரிடப்பட்டுள்ள மூலிகைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வருவதற்கான விழா சிறை மற்றும் சீர்திருத்த பள்ளிகள் துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி தலைமையில் நடைபெற்றது. இதனை அங்கு வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜா என்ற சிறைவாசி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், நடுவன் சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், சிறை அலுவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பல்வேறு நோய்களுக்கும் தீர்வு காணும் அரிய வகை மூலிகைகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்.  தற்போது ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தால் இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் புரியவில்லை. எனவே இயற்கை மருத்துவத்தை மீட்டெடுக்கும் நோக்கோடு இங்கு விளையும் மருத்துவ செடிகளை அறுவடைக்கு பின்னர் பொது மக்களின் தேவைக்காக சிறை வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்படும்,’’ என தெரிவித்தனர்.

Related Stories: