வடபழனி 100 அடி சாலையில் ஐடி ஊழியர்கள் சென்ற வேன் சாலை தடுப்பில் மோதி விபத்து: 10 பேர் காயங்களுடன் தப்பினர்

சென்னை: வடபழனியில் அதிகாலை ஐடி நிறுவன ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 10 ஊழியர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்.

செங்குன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை ஐடி நிறுவன ஊழியர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று பெரும்பாக்கம் நோக்கி புறப்பட்டது. வடபழனி அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்து கொளத்தூர் ரெட்டேரி புதிய லட்சுமிபுரத்தை சேர்ந்த பவித்ரா (23), சுகன்யா (24), கொளத்தூர் நேதாஜி தெருவை சேர்ந்த வசந்த் (23), புழல் புனித அண்தோணியார் 2வது தெருவை சேர்ந்த அஸ்வினி (22), புழல் எம்எம் பள்ளி தெருவை சேர்ந்த மீனாட்சி (23), சூரப்பட்டு அம்பத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தமிழரசன் (30), செங்குன்றம் வள்ளலார் தெருவை சேர்ந்த கீர்த்தனா (23), செங்குன்றம் எம்ஏ நகரை சேர்ந்த பிரியங்கா (22), புழல் காவாங்கரை குரு சாந்தி தெருவை சேர்ந்த ஜார்ஜ் (22), அசாருதீன் (31) உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான வேன் டிரைவர் முருகன் (38) காயங்களின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் வடபழனி 100 அடி சாலையில் இந்த விபத்து நடந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Related Stories: