ரூ.25 கோடி செலவில் தொடங்கப்பட்ட சிட்லபாக்கம் ஏரி புனரமைப்பு பணி விரைந்து முடிக்கப்படும்: நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல்

தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரியில் ரூ.25 கோடி செலவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் சிட்லபாக்கம் பெரியஏரி உள்ளது. சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி பொதுமக்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைக்கு ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது, இந்த ஏரியின் அருகில் குப்பை கிடங்கு இருந்தது. இதனால், சிட்லபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொண்டுவந்து இந்த கிடங்கில் கொட்டப்பட்டது. இந்த குப்பை கழிவுகள் அனைத்தும் ஏரி நீரில் கலந்து தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், அதன் அருகே பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், காவல் நிலையம் மற்றும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்தது. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரில் கலந்து வந்தது. அதுமட்டுமின்றி ஏரி பராமரிப்பு இன்றி இருந்ததால் நீர்பிடிப்பு பகுதி முழுவதும் ஆகாய தாமரை செடிகள் படந்து காணப்பட்டது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் பெருகியதால் ஏரி 50 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கியது. அதோடு ஏரி பகுதியில் சமூக விரோத செயல்களும் அதிகளவில் நடைபெற தொடங்கியது. இதனால், ஏரியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி சீரமைத்து ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குப்பை கிடங்கு முழுமையாக அகற்றப்பட்டது. பின்னர் 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ரூ.25 கோடி செலவில் ஏரி சீரமைக்க திட்டமிடப்பட்டு, அங்கிருந்த பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், காவல் நிலைய கட்டிடங்கள் என அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு, நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஏரியை சுத்தம் செய்து, ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தி நடைபாதை உட்பட பல்வேறு சீரமைப்பு பணிகளை செய்தனர். இப்பணி சுமார் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென கடந்த ஓராண்டுகாக எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் பணிகளை துவங்கி, ஏரியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று சிட்லபாக்கம் ஏரிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவர்களிடம் ஏரியின் வரைபடம் மற்றும் ஏற்கனவே நடைபெற்றுள்ள பணிகள், நடைபெற உள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் விரைவில் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் எனவும், ஏரியில் மீண்டும் கழிவுநீர் கலக்காதபடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை குறித்துக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதியளித்தனர். பின்னர், நீர்வள ஆதாரத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் ஏரியில் நிலுவையில் உள்ள பணிகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு நடத்தினோம். இந்த பணிகளை விரைவாக முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

* பொழுதுபோக்கு அம்சங்கள்

சிட்லபாக்கம் ஏரி உலக தரத்தில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஓபன் தியேட்டர் வசதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அதேபோல பொது மக்களுக்கு தேவையான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.

* இன்லெட் ஷட்டர்கள்

சிட்லபாக்கம் ஏரியின் கரைகளை அனைத்து பகுதிகளிலும் பலப்படுத்தி ஏரிக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் ரேம்ப் அமைக்க வேண்டும், ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் இன்லெட் ஷட்டர்கள், ஏரி முழுவதும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும், ஏரி முழுமைக்குமான பொதுமக்கள் நடைபாதை மின்விளக்குகள், கருகி வரும் செடிகளை காப்பாற்ற போர்வெல்கள் அமைத்து நீர் பாய்ச்சுவது, பொதுமக்கள் வசதிக்கு கட்டப்பட்ட கழிப்பிடத்தை உரிய பராமரிப்புடன் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* விளையாட்டு பயிற்சி

தற்போதைய சூழலில் சிறுவர்கள் செல்போன், ஆன்லைன் கேம் ஆகியவற்றில் மூழ்கியிருக்கும் நிலையில், சிட்லபாக்கம் பகுதி சிறுவர்கள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான சிலம்பாட்டம், யோகா போன்றவற்றை ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். இந்த ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கும்போது அவர்களுக்கு இதற்கான பயிற்சி பெற உதவியாக இருக்கும்.

Related Stories: