அனைத்திந்திய மாதர் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்

அண்ணாநகர்: விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அமைந்தகரையில் நேற்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாந்தி, மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி கூறும்போது, ‘‘விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக இந்த ஆசிரமம் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா என்பது கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டும். இதுதொடர்பாக,  சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.” என்றார்.

Related Stories: