பென்னாகரம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை நெருப்பூர் வனத்திற்கு விரட்டும் பணி தீவிரம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி இண்டூர் அருகே, கடந்த வாரம் 2 யானைகள் சுற்றித்திரிந்து பயிர்களை நாசப்படுத்தி வந்த நிலையில், கும்கி யானையின் உதவியால் ஒரு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை வனத்தில் விட்டனர். பின்னர், இண்டூர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை, பென்னாகரம் அருகே, உள்ள போடூர் கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை, குடியிப்பு பகுதியில் நுழைந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், வன அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

மாலை நேரம் என்பதால் தீ பந்தம் ஏந்தி ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தாசம்பட்டி, போடுபட்டி. பூனைகுண்டு, காட்டு வளவு, நீர்குந்தி, போடூர், கூத்தப்பாடி வழியாக விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களில் சிலர் யானை மீது கல்வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்கு காட்டிய யானையை, ஜக்கம்பட்டி வழியாக ஒனேக்கல் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். ஜக்கம்பட்டி வழியாக செல்லும் போது பயிர்களை சேதப்படுத்தியது. இதனிடையே ஒற்றை யானை தற்போது சிகரஅள்ளி பகுதியில் முகாமிட்டுள்ளது. அங்கிருந்து நெருப்பூர் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: