வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா: பக்தர்களுக்கும் கங்கை தீர்த்தம் ருத்ராட்சம் வழங்க ஏற்பாடு

பெரம்பூர்: தமிழகம் முழுவதும் நாளை  சிவராத்திரி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு சிவாலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு  வெளியிடப்பட்டு பணி மும்முரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், வியாசர்பாடியில் உள்ள 800 ஆண்டு பழமையான  இரவீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு முழுவீச்சில் நடந்து வருகிறது. நாளை காலை 6 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை 6 கால பூஜை நடக்கிறது. நாளை இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயிலின் பின்புறம் பிரத்யேக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 10 நாட்களுக்கு முன்பு இடம் ஆய்வு செய்யப்பட்டு பணி அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. நாளைக்கு கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் கங்கை தீர்த்தம், ருத்ராட்சம் மற்றும் வில்வம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள் என்பதால் மாநகராட்சி உதவியுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு பணி செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளன.  24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோயில் திருப்பணிகளை செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், திருக்கோயில் பணியாளர்கள் நந்தகுமார், மனோகர், ரோஜா ரமணி உள்ளிட்ட  பலர் செய்து வருகின்றனர்.

Related Stories: