குமரி கடலில் விடப்பட்ட 122 ஆமைக்குஞ்சுகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முருங்கவிளை கடலில் 122 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன. குமரி மாவட்டம் வளமான கடல் பகுதிகளை கொண்டதாகும். இதனால் இந்த பகுதியில் கடல் வாழ் ஆமைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிடுவது வழக்கம். இந்த முட்டைகளை மனிதர்கள் எடுத்து உணவாக உட்கொள்ள தொடங்கினர். இவ்வாறு முட்டைகளை அழிப்பதால் ஆமை இனங்கள் அழியும் நிலை உருவானது. இதையடுத்து ஆமைகளை பாதுகாக்கும் வகையில் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தென்பாற்கடற்கரை பகுதியில் ஆமை பொரிப்பகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்காக வனத்துறை சார்பில் 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம் துறை, ஆயிரங்கால் பொழிமுகம், தெற்குறிச்சி, அழிக்கால், வீரபாகுபதி, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கண்காணிக்கும் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்துக்கு கொண்டு வந்து அவற்றை குஞ்சு பொரிக்க வைத்த பின்னர் கடற்கரையில் விடுவது வழக்கம். அந்த வகையில் ஆமை முட்டைகள் பொரிப்பதற்கு வைத்த 45 நாட்களில் குஞ்சு பொரிக்கும். அண்மையில் முருங்கவிளை பகுதியில் 1204  ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. கன்னியாகுமரி இயற்கை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு அமைப்புடன் சேகரிக்கப்பட்ட இந்த முட்டைகள் பாதுகாக்கப்பட்டு குஞ்சுபொரித்தது.

அதன்படி  இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மொத்தம் 122 ஆமைக்குஞ்சுகள்  முருங்கவிளை கடலில் வனத்துறையினர்  விட்டனர். இவை பங்குனி ஆமைகள் ஆகும். இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ‘ குமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் பல்வேறு வளங்களை கொண்டதாகும். இந்த கடல் பகுதியில் அதிகளவில் ஆமைகள் உள்ளன. ஒரு ஆமை குறைந்த பட்சம் 150 முட்டைகள் வரை இடும். குமரி மாவட்டத்தில் கடந்த 2018ல் அதிகபட்சமாக ஒரு ஆமை 129 முட்டைகள் இட்டுள்ளது. ஆமை பொரிப்பகத்தில் பொரித்த குஞ்சுகளை கடலில் விட்டு உள்ளோம்.

பெரும்பாலும் கடலுக்குள் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி சென்று பின்னர் ஆமை குஞ்சுகள் கடல் பாசிகளை உணவாக உட்கொள்ளும். வழியில் கடல்பறவைகள் ஆமை குஞ்சுகளை தூக்கி சென்று விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  தமிழகத்திலேயே குமரி மாவட்ட கடல் பகுதிகள் அனைத்து வளங்களையும் கொண்டதாக உள்ளது. ஆமைகளை சாதாரண கடற்கரைகளில் காண முடியாது. வளமான கடற்கரை பகுதிகளில் தான் இவை அதிகம் இருக்கும்.

அந்த வகையில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகள் அதிகம் உள்ளன. ஆமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். ஆமைகள் கடலில் உள்ள கழிவுகளை உணவாக உட்கொண்டு, கடலை சுத்தம் செய்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கும் உயிரினமாக ஆமைகள் உள்ளன. எனவே ஆமை முட்டைகளை மனிதர்கள் அழிக்க கூடாது’ என்றனர்.

பங்குனி ஆமைகள் என்றால் என்ன?

தமிழக கடற்கரை பகுதிகளில் அதிகம் வாழுகின்ற ஆமையினமாக ஆலிவ் ரிட்லி என்ற  ஆமையினம் உள்ளது. பங்குனி மாதத்தில் இவை தமிழக கடற்கரைகளுக்கு வருவதால் இவற்றுக்கு பங்குனி ஆமைகள் என்று பெயர் உண்டு. இவை ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படும். இதய வடிவம் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த முறை பங்குனி மாதம் முன்பே இந்த ஆமைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: