மேகமலை ஊராட்சியிடம் சின்னச்சுருளி அருவி நிர்வாகத்தை ஒப்படைக்க கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு கிராமத்தில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. நீர்வரத்து உள்ள நாட்களில் அருவியில் குளிப்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அருவிக்கு அருகில் மேகமலை வனத்துறையினர் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வனத்துறையினர் பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்கின்றனர். இவ்வாறு வசூல் செய்யப்படும் பணம் அருவி பகுதியின் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியம் மேகமலை ஊராட்சிக்கு போதிய வருவாய் இல்லாததால், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. எனவே வருவாயை பெருக்கும் வகையில் கோம்பைத்தொழுவில் புதிதாக சோதனை சாவடி அமைத்து அதனை மேகமலை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில வருடங்களில் சின்னச்சுருளி அருவியில் போதுமான அளவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று முடிந்துவிட்டது.

இதனால் வரும் காலங்களில் சின்னச்சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே புதிதாக சோதனைச்சாவடி அமைத்து, அதனை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் அருவிக்கு வரும் வாகன ஓட்டுனர்களிடம் நுழைவு கட்டணம் பெற்று, அதனை கிராமங்களின் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்’’ என்றனர்.

Related Stories: