கள்ளக்காதலனுடன் செல்வேன் என்று ‘தில்லான’ பேச்சால் ஆத்திரம் ‘பிச்சைக்காரன்’ வேடத்தில் வந்த கணவர் மனைவியை பிளேடால் கிழித்து கொல்ல முயற்சி: நந்தனம் அரசு கல்லூரி பேராசிரியர் சிக்கினார்

சென்னை: பணி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்த மனைவியின் நடந்தையில் சந்தேகப்பட்டு, பிச்சைக்காரன் வேடத்தில் வந்த அரசு கல்லூரி பேராசிரியர் தன் மனைவியை, பிளேடால் கிழித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நந்தனம் அரசு கல்லூரி பேராசிரியரை ேபாலீசார் கைது செய்தனர்.‘‘சென்னை எழும்பூர் ஆங்கிலோ இந்தியன் குடியிருப்பு சாலை தீயணைப்பு துறை அலுவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி(56). இவர் நந்தனம் கல்லூரியில் வரலாற்றுப் பேரசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயவாணி(35) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். ஜெயவாணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக உள்ளார்.

இந்நிலையில், ஜெயவாணி கடந்த 13ம் தேதி இரவு பணி முடிந்து, குரோம்பேட்டையில் இருந்து எழும்பூர் வந்தார். பிறகு தனது வீட்டிற்கு ஆங்கிலோ இந்தியன் குடியிருப்பு சாலை வழியாக நடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிச்சைக்காரர் வேடத்தில் கிழிந்து ஆடைகள், முகத்தில் குரங்கு குல்லா அணிந்த நிலையில் ஜெயவாணியை வழிமறித்து, பிளேடால் முகம் மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக கிழித்து கொலை செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயவாணி வலி தங்க முடியாமல், உதவி கேட்டு சத்தம் போட்டார். அப்போது, சாலையில் இருந்த பொதுமக்கள் பிளேடால் கிழித்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் ரத்த காயமடைந்த ஜெயவாணியை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் ஜெயவாணி புகார் அளித்தார். அந்த புகாரின்படி, போலீசார் சம்பவம் நடந்த ஆங்கிலோ இந்தியன் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, பிச்சைக்காரன் போல் ஜெயவாணியை கொலை செய்ய முயன்ற நபர், அவரது கணவர் குமாரசாமி என தெரியவந்தது.

உடனே போலீசார், ஜெயவாணியை கொலை செய்ய முயன்ற அவரது கணவரும், நந்தனம் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் குமாரசாமி மீது ஐபிசி 324, 341, 506(2), பெண்கள் வன்கொடுமை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் விசாரணையின் போது பேராசிரியர் குமாரசாமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

நந்தனம் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் குமாரசாமி, சிந்தாதிரிப்பேட்டையில் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வந்த ஜெயவாணியை தனது செலவில் படிக்க வைத்துள்ளார். பிறகு குமாரசாமி தன்னை விட 20 வயது குறைவான ஜெயவாணியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜெயவாணியை, குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எல்சி நர்சிங் படிக்க வைத்தார். தற்போது அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். குமாரசாமி திருமணத்திற்கு பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வேம்பாக்கம் ராகவேந்திரா நகரில் தற்போது வசித்து வருகிறார். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்த ஜெயவாணியின் தந்தை கடந்த 11ம் தேதி இறந்துவிட்டார். இதனால் குமாரசாமி மற்றும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எழும்பூரில் உள்ள வீட்டில் குடியேறினார்.

குமாரசாமி தன்னை விட 20 வயது குறைவான தனது காதல் மனைவியும், தன்னை விட்டு சென்று விடுவார் என்ற அச்சத்தில், யாருக்கும் சந்தேகம் வராதப்படி தனது மனைவியை ‘பிச்சைக்காரன் வேடத்தில்’ பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்யும் நோக்கில் கிழித்ததாக விசாரணையின் போது பேராசிரியர் குமாரசாமி வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து போலீசார் அரசு கல்லூரி பேராசிரியர் குமாரசாமியை அதிரடியாக கைது ெசய்தனர்.

கள்ளக்காதலனுடன் செல்வேன்

ஜெயவாணி அடிக்கடி செல்போனில்  மணிக்கணக்கில் பேசி வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமாரசாமி தனது  மனைவியிடம் விசாரித்துள்ளார். அதற்கு ஜெயவாணி ‘நான் படிக்கும் பொழுது  ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் தான் பேசி வருகிறேன். அவருடன் நான்  சென்று விடுவேன்’ என்று கூறியுள்ளார். இதனால் குமாரசாமிக்கும் அவரது  மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Related Stories: