ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும் என கேட்கவில்லை: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஒரு புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தினந்தோறும் அத்துமீறல்கள் நடைபெறுகிறது. ஒரு எம்எல்ஏ ஒட்டகத்தில் செல்கிறார். பரோட்டா, டீ, போண்டா சுட்டு கொடுக்கிறார்கள். இது ஜனநாயக உரிமை. ஆனால், ஒட்டகத்தில் சென்று பிரசாரம் செய்வது தவறு. விலங்கின பாதுகாப்பு சட்டப்படி தவறு. அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம்.

வாக்காளர்களை சுயமாக நடமாடவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில கவர்னராக செல்ல இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக கட்சி என்ற முறையில் எங்களை அழைத்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான, சுதந்திரமான, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: