தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும் என்கிற உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும்,  நேர்மையாகவும் நடத்தப்படும் என்கிற இந்திய தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், மாவட்ட  ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால், மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இரு முறை இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிருடன் இல்லாத 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்களும், இடம் மாறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்களும் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபலன் ஆஜராகி, இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பாதுக்காப்பு பணியில் மத்திய காவல் படையை சேர்ந்த 409 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பறக்கும்படையினரும் பணியில் உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைமுறைகள் அனைத்தும், சிசிடிவியில் பதிவு செய்யப்படும். புகைப்பட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்வதாக தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சி.வி.சண்முகம் தரப்பில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், தேர்தலை நடத்த எடுத்த நடவடிக்கையை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (பிப்ரவரி 20) தள்ளிவைத்தனர்.

Related Stories: