பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் சேர்ந்து இந்திய தேர்தல் முடிவுகளை மாற்றியதா இஸ்ரேலிய நிறுவனம்?.. விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் இணைந்து இந்திய தேர்தல் முடிவுகளை இஸ்ரேலிய நிறுவனம் மாற்றி அமைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயர் டீம் ஜார்ஜ். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் உள்பட உலகம் முழுவதும் 30 தேர்தல்களில் முடிவுகளை மாற்றி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ‘‘தி கார்டியன்’’  பத்திரிகையாளர்கள் குழு நடத்திய சர்வதேச விசாரணையில், ‘‘டீம் ஜார்ஜ்” என்று  அழைக்கப்படும்  அதிநவீன  மென்பொருள் தொகுப்பு மூலம் இந்த தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இந்தியத் தேர்தலில் தலையிட இஸ்ரேலிய ஒப்பந்தக்காரர்கள் குழுவை பா.ஜ தகவல் தொடர்பு அணி பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பவன் கேரா, சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது:

 தவறான தகவல், போலி செய்திகளை  பரப்புவதில் இஸ்ரேலிய ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தம் செய்து ஆளும்  கட்சியின்   ஐடி பிரிவும், இஸ்ரேலின் ‘‘டீம் ஜார்ஜ்” குழுவும் இணைந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் தேர்தல் நடைமுறையை அவர்கள் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். இந்தியர்களின் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. போலி சமூக ஊடக பிரசாரங்களை இயக்க ஒரு மென்பொருளுடன் இணைக்கப்பட்டு அந்த தகவல் இந்தியர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் அரசின் பங்களிப்பு என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இந்த தேர்தல் மோசடி குறித்து ஒரு சர்வதேச நிறுவனம் பதிலளிக்கும் போது, உரிய விளக்கம் அளிப்பது ஒன்றிய அரசின் வேலை. ஏனெனில் இஸ்ரேல் குழுவின் செயல்கள் இந்தியாவில் தேர்தல் நடைமுறையை நேரடியாக பாதிக்கிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நமது நாட்டின் தேர்தல்களில் தலையிட வேறு உதவியை தேடுகிறது என்று அர்த்தம்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைப்பதன் மூலம் இந்தியர்களின் தகவல்கள் பரப்பப்படுகின்றன.  மோடி அரசுக்கு எதிராக தகவல் திருட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்த அரசு எதிர்கொள்ளும் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்று தகவல் திருட்டு. இந்த விஷயத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இந்த அரசு தொடர்ந்து தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய இதுபோன்ற வேலையை செய்கிறது. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் கூறினார்.

பவன் கெரா கூறுகையில்,’பாஜவின் ஐடி செல் அடிக்கடி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இதன் மூலம்  ஆளும் கட்சியால் இந்தியாவின் ஜனநாயகம் ‘‘ஹைஜாக்’’ செய்யப்படுகிறது. நமது நாட்டு தேர்தல்களில் ஆதிக்கம்   செலுத்த இஸ்ரேலிய ஏஜென்சியின் உதவி நாடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமர்ந்து கொண்டு மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிராக சதி செய்து இருக்கிறார்கள். நமது தேர்தல்களில் தலையிட பாஜ  வெளிநாட்டு ஹேக்கர்களின் உதவியை நாடியிருக்கிறது. டிஜிட்டல் மீடியாவில் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் நாட்டின் அரசியல் அமைப்பில் தலையிட மோடி அரசு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா (சிஏ), பெகாசஸைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.  

சமூக ஊடகங்களில் ஹேக்கிங் செய்து தவறான தகவல்களை பரப்பி உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தேர்தல் முடிவுகளை மாற்றியதாக  கூறும் இஸ்ரேலிய ஒப்பந்ததாரர்களின் குழுவான போஸ்ட் கார்டு நியூஸ் மற்றும் டீம் ஜார்ஜ் இடையே தொடர்பு உள்ளதா என்பதை பா.ஜவும், ஒன்றிய அரசும் விளக்க வேண்டும். ஏனெனில் இஸ்ரேலியர்களால் பின்பற்றப்படும் தவறான தகவல், போலி செய்தி பிரச்சார  முறை ஆளும் பாஜவால் பயன்படுத்தப்படுகிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் மீண்டும் குறிவைத்து பா.ஜ சார்பில் போலி செய்தி பரப்பப்பட்டது. இதுபற்றி மோடி அரசு விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

Related Stories: