அனல் மின் நிலைய விவகாரம்: தொழிலாளர் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்: ஒன்றிய அமைச்சர்களுக்கு கனிமொழி எம்பி கடிதம்

சென்னை:  தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஒன்றிய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதம்: தூத்துக்குடியில் என்டிபிஎல் தொழிற்சங்கத்தினர் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். என்டிபிஎலில் 91 நிரந்தர பணியாளர்கள், அவுட்சோர்சிங் என 1500 பணியாளர்கள் உள்ளனர். மேலும் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆலைகளின் ஒப்பந்த ஊழியர்களுக்குள் ஊதிய வேறுபாடு உள்ளது. தூத்துக்குடி ஊழியர்கள் நெய்வேலியை விட 20-40% குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

இது தொடர்பாக, என்டிபிஎல் தொழிற்சங்கம், மதுரை மண்டல தொழிலாளர் அலுவலகத்திலும், அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சிலும் வழக்கு தொடரப்பட்டு சாதகமாக உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் என்டிபிஎல் நிர்வாகம் தடை வாங்கியது. இவை தவிர பண்டிகை கால விடுமுறை, போனஸ், கோவிட் விடுப்பு அலவன்ஸ், மகளிர் பணியாளர்களுக்கு மகப்பேறு கால நிதியுதவி, இபிஎஃப், அபராதம் விதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். என்டிபிஎல் தொழிலாளர்களின் இந்த கோரிக்கைள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனவே இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: