அனுமதியின்றி வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல்: அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பறக்கும் படை, வாகன சோதனை, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே விதி மீறி அதிக அளவில் இடம், ஆட்கள் வைத்து பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் படி 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்று தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்க விடாமல் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: