பிப்ரவரி 24ம் தேதியன்று 75வது பிறந்த நாள் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கிறார் எடப்பாடி: 6 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

சென்னை: ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு வருகிற 24ம் தேதி எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதிமுக கட்சி சார்பில் 6 நாட்கள் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளான வருகிற 24ம் தேதி, காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள, அவரின் திருஉருவச் சிலைக்கு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குவார்.

இதையடுத்து, பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார். அதனைத்தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவர். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் நிர்வாகிகள் அனைவரும், தத்தமது பகுதிகளில் ஜெயலலிதா சிலைக்கும் அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். ஏழை, எளியோருக்கு அன்னதானம், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு என மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இடைத்தேர்தல் சம்பந்தமான பணிகள் நிறைவடைந்ததும், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் மார்ச் மாதம் 5, 6, 7 மற்றும் 10, 11, 12 ஆகிய 6 நாட்கள் நடைபெறும். ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: