அம்பத்தூரில் 130 தொழிற்சாலைகள் ரூ.2 கோடி வரி நிலுவை எதிரொலி தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்’: அதிகாரிகள் அதிரடி

சென்னை: சொத்து வரி கட்டாத  ஏற்றுமதி நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 130 தொழிற்சாலைகள் ரூ.2 கோடி அளவுக்கு வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கி வரும் ஏ.ஐ.என்டர்பிரைசஸ் எனும் தனியார் கார்மென்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.13 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், வரியை செலுத்தவில்லை. இந்நிலையில், நேற்று காலை ரூ.13 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ள ஏ.ஐ.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு, உதவி வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமையில், மண்டலம் 7ன் உதவி வருவாய் அலுவலர் பாலசந்தர் முன்னிலையில், மண்டல வருவாய் பிரிவு ஆய்வாளர்கள் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வந்து, அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுகுறித்து மண்டல வருவாய் அதிகாரிகள் கூறுகையில், அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் 130க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இதுவரை ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு வார காலத்துக்குள் நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்தாவிட்டால், அவர்களின் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Related Stories: