சென்னையில் கடந்த 3 நாட்களில் 10 ஆயிரம் தெருக்களில் கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி தகவல்

சென்னை: கடந்த 3 நாட்களில் மழைநீர் வடிகாலில் 817 கி.மீ நீளத்திற்கு 10,723 தெருக்களில் கொசு ஒழிப்பு புகை பரப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கையாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 287 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 286 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 84.79 கி.மீ. நீளத்திற்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், 4,133 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 144 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 817 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 829 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், 10,723 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகை பரப்பியும், நீர்நிலைகளில் 208.85 கி.மீ. நீளத்திற்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 231 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கும் அனுப்பப்பட்டது.

அண்ணாநகர்: அண்ணாநகர் 8வது மண்டல மருத்துவர் ஷீலா மற்றும் துப்புரவு அலுவலர் விஜயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் அண்ணாநகர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், டி.பி. சத்திரம், வில்லிவாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள  அனைத்து தெருக்களையும் ஆய்வு செய்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கொசுத் தொல்லை பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து, அனைத்து தெருக்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிய புகாரின் அடிப்படையில் அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். இதேபோல், கொசு மருந்து அடிக்காத தெருக்கள் விடுபட்டு இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

Related Stories: