புதுடெல்லி: நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல்பாடு குறித்து மாநிலங்களவை இணையதளத்தில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளின் அமர்வின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ‘வெட்கக்கேடு’ என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக்கும் முடிவை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சிலரும் விமர்சித்தனர்.
