பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு  அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் அதற்கான அறிவிப்பு சம்மந்தப்பட்ட இணை ஆணையர்களால் மண்டல அளவிலும், கோட்ட உதவி ஆணையர்களால் மாவட்ட அளவிலும் நாளிதழ்கள் மற்றும் அலுவலக ரீதியாக வெளியிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களை பரிசீலித்து, இந்து சமய அறநிலையங்கள் சட்ட விதிகளின்படி அறங்காவலர்களை நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு வெளியிடப்படும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பமானது இந்து சமய அறநிலையத்துறையின் வலைதளமான www.hrce.tn.gov.in  மூலமாகவும் வெளியிடப்பட்டு வருவதோடு, அதனை பொதுமக்கள் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில்களுக்கு அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய முறையில் பூர்த்தி செய்து, தகுந்த ஆதார, ஆவணங்களுடன் மீண்டும் மேற்படி வலைதளத்திலேயே பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட வலைதளத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட இணை ஆணையர்கள் மற்றும் கோட்ட உதவி ஆணையர்களால் பரிசீலிக்கப்பட்டு இந்து சமய அறநிலையங்கள் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டவாறு அறங்காவலர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே அறங்காவலர்களாக நியமனம் பெற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பங்களை நேரில் பெற்றோ அல்லது துறையின் வலைதளத்தின் மூலமாக விண்ணப்பித்தோ பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: