பெரம்பூர்: திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி காதலர் தினம் கொண்டாடிய மாணவர்களை பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்து, துணை கமிஷனர் எச்சரித்து அனுப்பி வைத்தார். பேருந்து மேற்கூரையின் மீது மாணவர்கள் ஏறி தகராறில் ஈடுபடுவது, பஸ் டே கொண்டாடுவது அவ்வப்போது சென்னையில் அரங்கேறி வரும் நிகழ்வுகளில் ஒன்று. அந்த வகையில், சமீபகாலமாக பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சென்னையில் பஸ் டே என்ற ஒன்றை கொண்டாட போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இருந்தபோதும் அவ்வப்போது மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, எல்லை மீறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் நோக்கி மாநகர பேருந்து (தடம் எண்:29இ) பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மேற்கூரையின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயம், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் புளியந்தோப்பு பகுதியில் இருந்து செம்பியம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
முரசொலி மாறன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதை கண்டு பேருந்தை மடக்கி, சாலையில் ஓரமாக நிறுத்தச் சொல்லி பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்களை பிடித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தார்.அதில், அவர்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் (19), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுதம் (22), கொளத்தூர் பகுதியை சேர்ந்த அஜய் (20), பெரம்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (18), தினேஷ் (18) மற்றொரு சந்தோஷ்குமார் (18), அலெக்சாண்டர் (18), விக்னேஸ்வரன் (18) என்பதும், இவர்கள் நேற்று காதலர் தினம் என்பதால் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்த பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ‘‘இனி நாங்கள் பேருந்தில் எந்தவித ரகளையிலும் ஈடுபட மாட்டோம்’’ என உறுதிமொழி எடுக்க வைத்து, அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.