வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம், மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் சிலை, அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் தலைவர்களுக்கு சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு அரங்கம் மற்றும் திருவுருவ சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் திருப்பூரில் அவருக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவ சிலைகளுடன் கூடிய அரங்கம், சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் நினைவாக திருப்பூர் உடுமலைப்பேட்டை நகராட்சி வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருவுருவ சிலைக்கும், நினைவாக உடுமலைப்பேட்டை வட்டம், மஜராதிருமூர்த்திநகர், தளி-2 கிராமத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அரங்கத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் மதுரை, உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களின் எதேச்சதிகார சட்டத்தை எதிர்த்து போராடியதால் 1920ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த 16 தியாகிகளை சிறப்பிக்கும் வகையிலும், அந்நிகழ்வின் 100 ஆண்டுகள் நினைவை குறிக்கும் வகையிலும் ரூ.1.47 கோடி செலவில் பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: