சுயமரியாதை இழந்த அடிமை கூட்டணி இடைத்தேர்தலுக்காக அதிமுக-பாஜ நாடகம்: கே.எஸ்.அழகிரி விளாசல்

ஈரோடு கிழக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் தேர்தல் தலைமை பணிமனையில் அளித்த பேட்டி: எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. ஏற்கனவே காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதியை கூட்டணி தர்மப்படி மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். இதுதான் கூட்டணி லட்சணம். வாய்ப்பு வழங்கியதோடு மட்டுமல்லாது திமுக மற்றும் தோழமை கட்சியினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் எதிரணியில் உள்ள அதிமுக தனது கூட்டணி கட்சி தமாகாவிடமிருந்து தொகுதியை பறித்து போட்டியிடுகிறது.

எங்கள் கூட்டணியின் வெற்றி ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகிறது. எங்கள் கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கையும், எழுச்சியும் உள்ளது. இந்தியாவிலேயே தலைசிறந்த  முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கின்றார். அதிமுக இரு அணிகளுக்குள் ஏதாவது பிரச்னை எனில் பஞ்சாயத்து செய்வது மட்டுமே பாஜ பணியாக உள்ளது. எடப்பாடி, பாஜவை விலக்கி வைத்து இந்த தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு  செய்துவிட்டார். இதற்கு ஏற்ப மோடி, அண்ணாமலை ஆகியோரின் படங்களை பயன்படுத்துவது இல்லை. தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஒன்றாகி விடுவார்கள். தேர்தலுக்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடித்தும், செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் அதிமுக-பாஜ கூட்டணி என்பது சுயமரியாதை இழந்த அடிமை கூட்டணியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: