பிபிசி அலுவலகத்தில் ரெய்டு; இது அறிவிக்கப்படாத அவசரநிலை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி ட்வீட்

டெல்லி: பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடத்துவது அறிவிக்கப்படாத அவசரநிலை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. 2002 குஜராத் வகுப்பு கலவரத்தை தடுக்க மோடி தவறிவிட்டதாக பிபிசி ஆவணப்படம் குற்றம் சாட்டியிருந்தது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடி பங்கு குறித்து பல கேள்விகளை ஆவணப்படம் எழுப்பியிருந்ததால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எதிர்ப்பை தொடர்ந்து பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

ஒன்றிய அரசின் தடையை மீறி பல பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டனர். ஆவணப்படத்தின் முதல் பகுதிக்கு பாஜக அரசு தடை விதித்த சில நாட்களிலேயே 2ம் பகுதியை பிபிசி வெளியிட்டது. ஆவணப்படம் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 11.30 மணி முதல் பிபிசி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. பிபிசியின் வருமானம் தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், பத்திரிகை சுதந்திரம் குறித்து 2014ல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி; முதலில், பிபிசி ஆவணப்படத்தை தடை செய்தார்கள்; இப்போது பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடத்துகிறார்கள்; இது அறிவிக்கப்படாத அவசரநிலை என குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்; அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை (JPC) வேண்டும் என்று கேட்கிறோம்; இந்த அரசு BBC-யை துரத்திச் செல்கிறது என கூறினார்.

Related Stories: