கிரிக்கெட்டில் இருந்து இயான் மோர்கன் ஓய்வு

லண்டன்: இங்கிலாந்து அணிக்காக உலக கோப்பையை வென்று சாதனை படைத்த முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அயர்லாந்தில் பிறந்த மோர்கன் (36 வயது), 2006ல் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர், 2009ல் நெதர்லாந்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியிலும் 2010ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டெஸ்டிலும் இங்கிலாந்து சார்பில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். மோர்கன் 16 டெஸ்டில் 700 ரன் (அதிகம் 130, சராசரி 30.43, சதம் 2, அரை சதம் 3), 248 ஒருநாள் போட்டியில் 7,701 ரன் (அதிகம் 148, சராசரி 39.29, சதம் 14, அரை சதம் 47) மற்றும் 115 டி20ல் 2,458 ரன் (அதிகம் 91, சராசரி 28.58, அரை சதம் 14) எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், இனி ஆலோசகர், வர்ணனையாளர், பயிற்சியாளராக செயல்படுவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோர்கனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: