ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5300 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இடையே ரூ.5,300 கோடி தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம், 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. ரெனால்ட் நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். 2008 பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2007-08ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில், 4,80,000 கார்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அதிநவீன பயணிகள் வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது. இந்த ஆலை, 2010ம் ஆண்டில் தனது உற்பத்தியை தொடங்கியது.

அதேபோன்று, ரெனால்ட் நிசான் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மையம் என்பது உலக அளவில், இக்குழுமத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் ஒரு அமைப்பாகும். 2007ம் ஆண்டில் சென்னையில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள இந்த பிரத்யேக தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மையம், 8000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ரெனால்ட் நிசான் குழுமம் இந்த வசதிகளில் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில் 7,000 பேருக்கும், தொழில்நுட்பம் மற்றும் வணிக மையத்தில் 8,000 பேருக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இது மட்டுமின்றி, பொறியியல் மையங்கள், உற்பத்தி திட்டங்கள், விற்பனை நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான நிதி உதவி ஆகியவற்றில் இக்குழுமம் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனங்களில் சுமார் 16,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவற்றில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன. தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தித் திறன் பயன்பாட்டை 2 லட்சம் கார்களிலிருந்து 4 லட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் டாகா மாசாயுகி, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே, நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கில்லாவுமா கார்டியர், நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அஸ்வினி குப்தா, நிசான் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர் பிராங்க் டாரஸ், ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கட் மிலாபாலே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: