எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதிரொலி; ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தை அண்ணாமலை புறக்கணிக்க முடிவா?.. கடும் அதிருப்தியில் பாஜ மூத்த நிர்வாகிகள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஈரோடு கிழக்கு தொகுதி கரைவேட்டிகளால் பரபரக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதற்கிடையே, இரு தரப்பும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்தது. ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் போட்டியிட ரெடியான நிலையில், வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என ஆரம்பம் முதலே பாஜ சொல்லி வந்தது. அதேசமயம், பாஜ போட்டியிட விரும்பினால் நாங்கள் விட்டுக்கொடுக்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்த உடனே முதலில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பாஜ அறிவித்தது. இதனால் இந்த தேர்தலில் பாஜ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் பாஜகவுக்கு ஈரோட்டில் செல்வாக்கு இல்லாததால் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்ந்தெடுக்க வெண்டும் என்று தீர்ப்பு வந்தது. இதையடுத்து, எடப்பாடி அணி, கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக முன்மொழிந்து பொதுக்குழு ஆதரவுடன் தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற்றார். முன்னதாக, பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

பாஜ கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளித்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணி அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் அணி கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஓபிஎஸ் அமைதியாக இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கி எழுந்துள்ளனர். ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அவரது அணியினர் கூட பாஜவை இதுவரை பெரிதாக  விமர்சித்துப் பேசியதில்லை.

ஆனால் தற்போது இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியை பாஜக நடத்திய விதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுகின்றார் என்று பகிரங்கமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரங்களில் பாஜகவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேர்தலுக்கு ஆதரவு மட்டும் என்ற அடிப்படையில் மூத்த தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே சென்று தலையை காட்டி வருகின்றனர். மேலும் பிரச்சாரங்களில் கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜ கொடிகள் கூட தென்படவில்லை என்று கூறுகின்றனர்.

 இந்த பிரச்சாரங்களில் யார் யாரை புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், பாஜக பிரச்சாரம் செய்வதை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வெவ்வேறு நாட்களில் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதனால் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்வாரா மாட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன.

ஏற்கனவே, அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அவர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுடன் இலங்கைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பாஜகவினர் மத்தியில் பிரஷரை ஏற்றியுள்ளது.  ஏற்கனவே, இடைத்தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து கொஞ்சம் கூட இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தான் தொங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அதிரடியாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது பாஜகவினருக்கு கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளதாம். இதனால் பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி தனியாக பிரச்சாரத்துக்கு செல்வாரா? அல்லது அதிமுகவினரின் அதிருப்திக்கு பணிந்து பிரச்சாரத்தை புறக்கணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: