எங்களுக்கு வேலை எளிதாக முடிய ராகுல் போன்ற தலைவர்கள் தேவை: உ.பி முதல்வரின் கிண்டல் கருத்து

லக்னோ: ராகுல் போன்ற எதிர்கட்சி தலைவர்கள் இருந்தால் எங்களது வேலை எளிதாக முடியும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார். உத்தரபிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத், தனியார் செய்தி ேசனலுக்கு அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரியாக செயல்படவில்லை. அவர்கள் எதிர்மறையான மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்.

வதந்திகளையும், போலி பிரசாரங்களையும் முன்வைத்து பேசுகின்றனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்து, எந்தவொரு நிகழ்வும் நடக்காமல் கெடுக்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களாக இருக்கும் வரை, எங்களது வேலை மிகவும் எளிதாக இருக்கும். உண்மையில், அவர் பாஜகவுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தி தருவதாக எல்லோரும் கூறுகிறார்கள். அவரது இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் என்ன? அதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்? என்பது அவருக்கே தெரியாது.

எதிர்மறையான கருத்துகளை பரப்புவதன் மூலம் நாட்டு மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது. மிகப்பெரிய கட்சியின் இதுபோன்ற செயல், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போன்று உள்ளது. அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரசின் இருப்பு காணாமல் போகும்’ என்றார்.

Related Stories: