கொள்ளிடம் பகுதி ஊராட்சியில் பயனற்று கிடக்கும் குப்பை ஏற்றி செல்லும் வாகனம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதி ஊராட்சிகளில் குப்பை ஏற்றி செல்லும் வாகனங்கள் பயனற்று கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பல ஊராட்சிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து செல்வதற்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

கொள்ளிடம் பகுதியில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஊராட்சிகளுக்கு 6 அல்லது 8 வரையிலான வாகனங்களும் மக்கள் தொகை குறைந்த ஊராட்சிகளுக்கு இரண்டு அல்லது மூன்று குப்பை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர்கள் இந்த மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்தை இயக்கி குப்பைகளை ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட உரிய இடத்தில் விரைவில் கொண்டு சேர்த்தனர்.

இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு மூன்று அல்லது நான்கு மாத காலங்கள் மட்டுமே நன்கு இயங்கின. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாகனமும் பழுதாகி ஊராட்சி பகுதியில் உள்ள ஒதுக்குப்புறத்தில் நிறுத்தப்பட்டது. பழுதடைந்து நின்ற குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஊராட்சிகள் சார்பில் அதிகாரிகள் மேலும் பழுதை சரி செய்து இயக்க முடிவு செய்தனர்.

ஆனால் இந்த வாகனங்களுக்கு உரிய உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின்களையும் சரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கண்ட, கண்ட இடங்களில் நிறுத்தப்பட்டு எந்தப் பயனும் இன்றி கிடைக்கின்றன.

ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை விரைவில் எடுத்துச் செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் செயல்படாமல் போனதால் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் விரைவில் எடுத்துச் சென்று சேர்ப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.

இந்த மூன்று சக்கர வாகனங்களை மீண்டும் இயக்கும் வகையில் உரிய உதிரி பாகங்கள் கிடைக்கச் செய்யவும் மீண்டும் அவைகளை இயக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட குப்பைகளை விரைவாக அள்ளிச் செல்லும் வாகனங்களை உடனடியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அனைத்து ஊராட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: