காதலர் தினம் எதிரொலி தாஜ்மகால் ரோஜாக்கள் விற்பனை சூடுபிடித்தது: பூக்களை வாங்க காதலர்கள் ஆர்வம்

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, தாஜ்மகால் ரக ரோஜா, ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா என பல வகையான ரோஜா பூக்கள் குவிந்துள்ளன. இவற்றை வாங்க காதலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக முழுவதும் நாளை காதலர் தினம் (வாலன்டைன் டே) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ஓசூரில் இருந்து கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு அதிக அளவில், பலவிதமான ரோஜா பூக்கள் மினி லாரி, வேன் ஆகிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் சராசரியாக 5 முதல் 7 டன் வரையிலான ரோஜாக்கள் கொண்டு வரப்படும்.

தற்போது, காதலர் தினத்தை முன்னிட்டு 10 டன் ரோஜா பூக்கள் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவிந்துள்ளன. சாதாரண நாட்களில் ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250க்கும், திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரக ரோஜா பூக்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா ரூ.380 முதல் ரூ.400 வரையிலும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா ரூ.350 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோயம்பேடு பூமார்க்கெட் சங்க தலைவர் முக்கையா கூறுகையில், நாளை (14ம் தேதி) காதலர்தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை வாங்குவதற்கு காதலர்கள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வருடம் காதலர் தினத்தை முன்னட்டு, பூ வியாபாரம் சூடுபிடித்த மாதிரி, இந்த வருடமும் வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.’’என கூறினார்.

Related Stories: