மெரினா சாலையில் விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்களை மீட்ட அமைச்சர்: உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா(20) கூடைப்பந்து வீரரான இவர், தனது நண்பர்களான ஸ்ரீபாலாஜி(18), முகமது தமீம்(33), கவுதம்(21) ஆகியோருடன் இரண்டு பைக்குகளில் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பின்னர் பைக்கில், காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர்களின் பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் கூடைப்பந்து வீரர் சூர்யா உட்பட 4 பேரும் சாலையில் விழுந்ததில், அனைவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.

அப்போது அவ்வழியாக காரில் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், படுகாயமடைந்தவர்களை பார்த்ததும் தனது காரை நிறுத்தி, அவர்களை தன் காரிலேயே ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், காயமடைந்த 4 பேருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு சிகிச்சை அளிக்கும் வரை அமைச்சர் உடன் இருந்தார். பிறகு காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அங்கிருந்து சென்றார். சாலையில் காயமடைந்தவர்களை அமைச்சர் ஒருவர் மீட்டு, தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பொதுமக்களிடையே வெகுவாக கவர்ந்தது.

Related Stories: