சென்னை: செங்கல்பட்டு அருகே நடந்த திருமண விழாவில், பாரம்பரிய சமையலை நினைவுபடுத்தும் வகையிலும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பை பரிசாக வழங்கி நண்பர்கள் வாழ்த்தினர். செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 10ம் தேதி பூபாலன் என்பவருக்கும் ஹேமலதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இத்திருமண நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழக பாரம்பரிய சமையல் முறையை மணமக்களுக்கு நினைவுபடுத்தும் வகையிலும் மண் அடுப்பு மற்றும் விறகு கட்டைகளை நண்பர்கள் திருமண பரிசாக வழங்கி வாழ்த்தி அசத்தினர்.