ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தன்னிறைவு: அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்

பெங்களூரு: உள்நாட்டில் பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம் என்று ஏரோ இந்தியா சின்னம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பெங்களூரு,  எலகங்கா விமான நிலையத்தில் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சி இன்று காலை  9.30 மணிக்கு தொடங்குகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஏரோ இந்தியா 2023 சாகசத்தை தொடங்கி வைக்கிறார். மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவிலுள்ள தனியார் ஓட்டலில் நடந்த விழாவில் ஏரோ இந்தியாவிற்கான சின்னத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், நமது நாடு அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டில் பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தியும்  அதிகரித்துள்ளது. ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு நிறுவனங்களின்  ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இது நமது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகும். விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன், என்றார்.

Related Stories: